Tuesday, June 25, 2013

மாநிலங்களவை தேர்தல் 2013: திராவிட சாதி அரசியலும், அதன் முற்போக்கு முகமூடியும்

மாநிலங்களவை தேர்தல் 2013: திராவிட சாதி அரசியலும், அதன் முற்போக்கு முகமூடியும் 

மாநிலங்களவை தேர்தல் 2013 - இப்படியொரு தேர்தல் விறுவிறுப்பை தமிழக தேர்தல் களம்  இதுவரை கண்டதில்லை. அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். அப்படி என்னதான் பரபரப்பு என்கிறீர்களா?



தற்போது ஆட்சி செய்யும் அண்ணாவின் பெயரை கொண்ட ஒரு திராவிட கட்சி "40-ம் நமதே" என அறிவித்து இனி வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என முழங்கி 5 மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்தது. அறிவித்து அடுத்த சில நாட்களிலேயே, வழக்கம் போல தனது ஒரு வேட்பாளரை வெளியேற்றி,  “மதசார்பற்ற” பொதுவுடைமை கட்சியை சேர்ந்த ஒருவரை தன் கூடாரத்திற்குள் சேர்த்துகொண்டது.

மற்றொரு கூடாரத்தில்  இருக்கும் ஆண்ட திராவிட கட்சி இந்த மாநிலங்களவை தேர்தலில்  தான் வெற்றி பெற முடியாது என தெரிந்திருந்தும் தன் வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தியது. சரி. இனி யார் அந்த வேட்பாளர் என பார்ப்போம்.

கட்சி தொடங்கிய கலாத்தில் இருந்து தன் கட்சிக்காக தன்னையே அர்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்து மக்களுக்காக பல போராட்டங்கள் செய்து சிறை சென்ற ஒரு மாபெரும் போராளி அவர். கடந்த 6 ஆண்டு காலமாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து ஊழலற்ற சகாப்தம் படைத்தற்கு , இந்திய நாடு மட்டும் இன்றி உலகமே “2ஜி அலைகற்றல் தொலைதொடர்பில்” வியப்படைய செய்தவர். தற்போது, மீண்டும் அடுத்த ஆறு ஆண்டு காலம் அகிலமே போற்றும் வண்ணம் செயலாற்ற போட்டிக்கு நிறுத்தப்பட்டுள்ளார். ஆஹா, இதுவல்லவா பெரியார் மற்றும் அண்ணா போன்ற மாமனிதர்களின் கொள்கைகளை மதிக்கும் ஒரு திராவிட கட்சியின் செயல்பாடு.

இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ஒரு  மாமேதையை டெல்லிக்கு அனுப்ப ஆதரவு திரட்டும் பணி ஆரம்பமானது. தமிழ் ஈழத்திற்கு உலகமே போற்றும் வண்ணம் ஓயாது உழைத்த இந்த திராவிட கட்சி, அதற்கு ஒரு மைல் கல்லாக இரண்டு மாதத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியுடனான  உறவை முறித்துகொண்டது. இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்து தனக்கே உரிய நடிப்பில் அரசியல் நாடகத்தை தொடங்கியது

தற்போது, தன் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள “அகில உலக அரசியல் தலைவி” வெற்றி பெற ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சியின் டெல்லி கதவை தட்டியதன் மூலம் இரண்டு மாத கால “அரசியல் நாடகம்” முடிவுக்கு வந்துள்ளது.    இதன்மூலம்  தமிழ் ஈழத்திற்கு தன்னுடைய “தொடர்ந்து செய்து வரும் தியாகங்களை” மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த திராவிட கட்சி. இதனை இலங்கையில் மிச்சம் மீதி வாழும் தமிழர்களும், தன் நாட்டை விட்டு  புலம் பெயர்ந்த தமிழர்களும், தன்மானமுள்ள தமிழ் நாட்டு மக்களும் வரலாறு உள்ளவரை மறக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தன் வேட்பாளருக்காக  வலைவீசும் படலம் தொடர்ந்தது. இதில் திராவிடத்தின் சூழ்ச்சி தெரியாத நான்கு ஆடுகள், நரியிடமிருந்து தப்பித்து ஓநாயிடம் மாட்டிகொண்டது. இதை தொடர்ந்து தன்வலையை  பாட்டாளிகளின் மீது வீசியது. ஏற்கனவே, திராவிட சூழ்ச்சிக்கு இரையாகி, அனைத்தையும் இழந்து அதன் மூலம் சரியான பாடத்தை கற்றுக்கொண்டு,  "நீர் உள்ளளவும், நிலம் உள்ளளவும், வான் உள்ளளவும் எந்த திராவிடக் கட்சியுடனும் கூட்டணி இல்லை"  என்று இரண்டு வருடமாக தெருவுக்கு தெரு முழங்கி கொண்டிருக்கும் பாட்டாளிகளின் மூன்று சொத்துக்கு குறிவைத்தார்கள். அதற்காக, பாட்டாளிகளின் இளைய தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க  பல்வேறு வழிகளில் முயற்சி செய்யப்பட்டது. பாட்டாளிகள் தங்கள் முடிவை உறுதியாக தெரிவித்துவிட்ட பின்னரும், அவரை தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் திராவிட ராஜதந்திரத்தை அறியாத அவர் சந்திக்க தலையசைத்தார்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக கவனமாக ஊடகங்களுக்கு தெரியாமல் கொல்லைப்புறமாக தலையில் முக்காடு போட்டு கொண்டு, பாட்டாளிகளின் சொந்த சமூகத்தை சேர்ந்த இருவரோடு திராவிட கட்சியின் அடுத்த தலைவர் அவரை சந்தித்துள்ளர்.

இதில் எங்கே ராஜதந்திரம் என்கிறீர்களா?  பாட்டாளிகள் தங்கள் முடிவான திராவிட கட்சிகளை ஆதரிப்பதில்லை என்ற நிலைபாட்டை வந்தவர்களிடம் தெளிவாக எடுத்து கூறியும், நீங்கள் தற்போதைக்கு எதையும் வெளியே கூறவிடவேண்டாம் என்றும், உங்கள் செயற்குழுவில் முடிவு செய்வதாக வெளியே கூறுங்கள் என்று கேட்டுகொண்டது. தனக்கே உரிய ராஜதந்திரத்தை பயன்படுத்தி வெளியே வந்து தனது ஊடக அடிமைகளிடம், பாட்டாளிகள் ஆதரவு தங்களுக்கே என்று  எழுதச்சொல்லி மார்தட்டிக் கொண்டது.

பாட்டாளிகள் மீது  சேறு பூச காத்து கொண்டிருந்த ஊடகங்கள் இச்சம்பவத்தை பயன்படுத்தி "திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை" என்ற கொள்கையில் நிலைப்பாடு இல்லாத கட்சி என்று முத்திரை குத்தி பாட்டாளிகள் மீது மீண்டும் ஒருமுறை  அவதூறை பரப்பியது.

ஆட்சி, அதிகாரம்,  பதவி என வரும் போது, எப்போதும் போல், திராவிட கட்சியின் உயிர்மூச்சு கொள்கையான சாதி ஒழிப்பை குப்பையில் தூக்கி எரிந்துவிட்டு, எப்படிபட்டவர்களின்  ஆதரவுக்கும் கையேந்துவார்கள் இவர்கள். இதுதான் தந்தை பெரியார் அவர்கள் இவர்களுக்கு கற்றுகொடுத்த கொள்கை பிடித்தம்.

ஏன் அவர் பாட்டாளிகளின் சமூகத்தை சேர்ந்தவர்களோடு வர வேண்டும்?  ஏன் மற்ற சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியில் இல்லவே இல்லையா?  மற்ற கட்சிகளிடம் தூது சென்ற போது இந்த இருவர் தான் கூட சென்றார்களா? அப்படி வந்தாவது அரியணை ஏறி பதவி சுகம் அனுபவிக்கலாம் என்ற ஆசை தானே! இதுதான் திராவிட கட்சிகளின் உயிர்மூச்சு கொள்கையான சாதி ஒழிப்பா?

சரி....பாட்டாளிகள் விஷயத்தில் தான் இப்படி என்றால் தேய்ந்து கொண்டிருக்கும் மற்றொரு நடிகரின் கட்சியிடம் ஆதரவு கேட்க யாரை அனுப்பியிருந்தார்கள் தெரியுமா?அங்கே நாயுடு சமுதாயத்தை சேர்ந்த எ.வ. வேலு தூது அனுப்பபட்டிருக்கிறார். சரி.. அதையும் விடுங்கள்., மனித நேயத்தை பெயராக கொண்ட இஸ்லாம் கட்சியிடம் ஆதரவு கேட்கும் போது,  இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த மைதீன்கான் சென்றிருக்கிறார்.  இந்த செயல்பாடுகள் எல்லாம்  திராவிட கட்சியின் எந்த சாதி ஒழிப்பு கொள்கையின் கீழ் வருகிறது?

சாதி ஒழிப்பு, சாதி அழிப்பு, சாதி எதிர்ப்பு, சாதி வெறி, சாதி சாதி என  தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் பொதுமக்களை சிந்திக்க விடாமல், திராவிட அரசியல்வாதிகளின் கைகூலிகள் மக்களை மூளைச்சலவை செய்து  திசை திருப்பி சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே.. மேலும், இதற்கு துணை போகும் ஊடகங்களே, பத்திரிக்கையாளர்களே, சமூக ஆர்வலர்களே, எழுத்தாளர்களே, கவிஞர்களே, முற்போக்குவாதிகளே,  இப்போது என்ன சொல்ல போகிறீர்கள்?

1. இரண்டு வாரங்களுக்கு முன்  "எந்த திராவிட கட்சி இவர்களிடம் கூட்டணிக்கு போனார்கள்" என்று கர்ஜித்த ஒருவர், இன்று எதற்காக வெளியே தெரியாமல் கூட  கொல்லைப்புறம் வழியாக சென்று அவர்களை சந்திக்கவேண்டும்? இதுதான் திராவிட கட்சிகளின் சுயமரியாதை கொள்கையா?

2. தங்களுக்கு ஆதரவு இல்லை என்று உறுதியாக கூறிய பின்னரும், ஊடகத்திற்கு அவர்கள் ஆதரவு கொடுத்து விட்டார்கள் என்று ஏன்  பொய்யை கசிய விடவேண்டும்? இதுதான் திராவிட  கட்சிகளின் முற்ப்போக்கு கொள்கையா?

3. ஆதரவு கேட்க ஏன் இரண்டு பாட்டாளிகளின் சொந்த சமூகத்தை சேர்ந்த இருவரை உடன்  அனுப்பி வைக்க வேண்டும்? வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அந்த திராவிட கட்சியில் இல்லையா ? இதுதான் திராவிட கட்சியின் சாதி ஒழிப்பு கொள்கையா ?

4. மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு யாருக்கு கேட்கிறீர்கள் ? இவர்தான் கடந்த ஆறாண்டு காலங்கள்  மக்கள்  நலனுக்காக தன்நலன் கருதாமல் போராடிய அப்பழுக்கற்ற போராளியா?

5.ஊழலுக்காக உலக அளவில் புகழ் பெற்ற ஒரு சாதனை தலைவி, அதாவது, கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அடுத்த ஆறு ஆண்டுகள்  தொடர வேண்டுமா?


போதும்! ஐம்பது ஆண்டு காலம்  திராவிட மாயைக்குள் சிக்கி,  நம்மை மறந்து, அடிப்படை உரிமைகளை இழந்து, மது போதையால் சிதைந்து, சினிமாவால் நம் கலாச்சாரத்தை தொலைத்து, மலிவுக்காகவும்  இலவசங்களுக்காகவும்  பிச்சையேந்த வைத்தது போதும்.

மக்களே! இவை அனைத்தையும் மாற்ற உங்களால் மட்டுமே முடியும்.. அதற்கு ஒரு சொட்டு மை போதுமே! உங்கள் விரலில் வைக்கப்படும் அந்த ஒரு சொட்டு மை ஒரு புதிய சகாப்தத்தை படைக்கட்டுமே!  மக்களே விழித்து கொள்ளுங்கள்! 

# முக்கனல் தமிழன்

No comments:

Post a Comment